செய்திகள்

கர்நாடகாவில் விடிய விடிய பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூர், நீலமங்களா மற்றும் மைசூரில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பெங்களூர்:

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர், நீலமங்களா மற்றும் மைசூரின் பல பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் நீர் தேங்கியுள்ளது. தாழ்வானப் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபட்டுள்ளது.

சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மைசூரின் அலிம் நகரில் மழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். துர்கா பூஜையை ஒட்டி மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இடியுடன் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் ஒரே நாளில் 180 மி.மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது. இந்த மாதம் முழுவதும் பெய்த சராசரி மழையின் அளவு 212 மி.மீட்டராகும். இதனால் பல ஏரிகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அவை உடையும் அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.