செய்திகள்

இமாச்சல் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மூத்த தலைவரின் வேட்புமனு நிராகரிப்பு

இமாச்சல் சட்டசபை தேர்தலில் தியோக் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வித்யா ஸ்டோக்ஸின் வேட்புமனுவை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

மாலை மலர்

சிம்லா:

இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருப்பவர் வித்யா ஸ்டோக்ஸ். கடந்த 1982 முதல் பல முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தியோக் தொகுதியில் தனக்கு சீட் கேட்டு கட்சி மேலிடத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், 89 வயதான வித்யாவுக்கு பதிலாக வேறு ஒருவருக்கு கட்சி சீட் வழங்கியது. எனினும், நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், தியோக் தொகுதிக்கு வித்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் அவசர அவசரமாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் வித்யாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனர். இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.