புதுடெல்லி:
நோக்கியா பிராண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கியது. நாடு முழுவதும் இயங்கி வரும் நோக்கியா விற்பனை மையங்கள் மற்றும் எச்எம்டி குளோபல் ஒப்பந்தம் செய்துள்ள விற்பனை மையங்களில் நோக்கியா 3 ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் இன்று முதல் வாங்க முடியும்.
இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் 400 பிரத்தியேக விற்பனையாளர்கள் மற்றும் 80,000 விற்பனை மையங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியா வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா 3 விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்வர் வைட், மேட் பிளாக், டெம்ப்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவில் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்தது. நோக்கியா 6 பிரத்தியேகமாக அமேசானில் மட்டும் விற்பனை செய்யப்படும் நிலையில், நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கிறது. இதில் தற்சமயம் நோக்கியா 3 மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.
நோக்கியா 3 சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 2650 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் நோக்கியா 5 விலை ரூ.12,899 என்றும் நோக்கியா 6 ரூ.14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 6 முன்பதிவுகள் அமேசானில் ஜூலை 14-ந்தேதி துவங்குகிறது.