சென்னை:
தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்ற நிலையில், நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் திடீரென ஆலோசனை நடத்தினர். பின்னர், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”டிடிவி.தினகரன் உள்ளிட்டோரை விலக்கி வைத்த முடிவில் உறுதியாக உள்ளோம். தினகரனை கட்சியை சார்ந்த யாரும் சந்திக்க மாட்டார்கள். சசிகலா தரப்புடன் எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறினார்.
இந்நிலையில், பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கட்சியில் இருந்து ஒதுங்கச் சொல்ல யாருக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
மேலும் தினகரன் பேசியதாவது:-
கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. கட்சியை விட்டு என்னை நீக்கும் அதிகாரத்தை ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது? அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் போல ஜெயக்குமார் நடந்து கொள்கிறார். கட்சிக்கு பின்னடைவு வந்தால் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
இரு அணிகள் இணைப்பு குறித்து மாறுபட்ட கருத்துகளை அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணையட்டும் என்று 45 நாட்கள் கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தேன். 45 நாட்கள் நான் ஒதுங்கி இருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முன்னேற்றம் ஏற்படாவிட்டால் மீண்டும் கட்சி பணிக்கு திரும்புவேன். 60 நாட்கள் பொறுத்து இருக்கலாம் என்று சசிகலா கூறினார். அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைய 2 மாத கால அவகாசம் அளிக்கிறோம்.
அமைச்சர்கள் பயத்தில், பதற்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையை சொல்லும் காலம் வரும். அமைச்சர்களுக்கு யார் மீது பயம் உள்ளது என்பதை காலம் தெளிவுபடுத்தும்.
இவ்வாறு தெரிவித்தார்.