செய்திகள்

நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தடை விதிக்கவில்லை: உச்ச நீதிமன்ற உத்தரவு விவரம்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என்றும் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மாலை மலர்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்று கூறியது.

“நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அரசியல் கட்சிகள் கடை அடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தக்கூடாது. சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சனைகளை கையாள வேண்டும்” என்றும் தெரிவித்தது.

அத்துடன், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, திருச்சியில் தி.மு.க. தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு வழங்கிய அனுமதியை காவல்துறை ரத்து செய்தது. இருப்பினும் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.

இந்நிலையில், நீட் போராட்டங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் வெளியாகி உள்ளது.