செய்திகள்

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்படாது - மத்திய அரசு திட்டவட்டம்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. அத்துடன், புதிய ரூ.500, ரூ.2000 ஆயிரம் நோட்டுக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இதனிடையே பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மக்களும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று பழைய நோட்டுக்களை மாற்றினர். பின்னர் பெட்ரோல் வங்கிகள், ரெயில்வே டிக்கெட் முன் பதிவு உள்ளிட்டவற்றில் கால நீட்டிப்பும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி கொள்வதற்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுப்பது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 4-ம் தேதி தெரிவித்துள்ளது. 

பழைய நோட்டுகளை மாற்ற வாய்ப்பு தவறிய நேர்மையான நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார். மேலும் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வங்கியில் மாற்ற கால அவகாசம் வழங்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

மேலும், “கால அவகாசம் வழங்கினால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான நோக்கமும் கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டமும் செயலற்றதாகிவிடும். புதிய வாய்ப்பு வழங்கப்பட்டால் பினாமி சொத்துக்களுக்கு வழிவகுத்துவிடும்” என்று மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT