பணத்தின் உண்மை தன்மையை சோதிக்கும் இயந்திரங்களின் மூலம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது.
இதற்கிடையே, ரிசர்வ் வங்கி 2016-17-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தில் 99 சதவீதம், அதாவது 15.28 லட்சம் கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளது. மொத்தம் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது என்று தெரிவித்திருந்தது.
திரும்பப் பெறப்பட்ட நோட்டுகளை எண்ணும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. நோட்டுகள் தடை செய்யப்பட்டு 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் தடை செய்யப்பட்ட பணத்தின் மதிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில், ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்ட திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
பணத்தின் உண்மை தன்மையை சோதிக்கும் இயந்திரங்களின் மூலம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. ஆனால், திரும்ப பெறப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எண்ணுவதற்காக எந்த அலுவலகத்திலும் பணம் எண்ணும் இயந்திரம் பயன்படுத்தவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நோட்டுகளை எண்ண பயன்படுத்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தருவதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்களை தருவது மனித வளத்தை அதிகளவில் திசைதிருப்பிவிடும். தகவல் அறியும் சட்டம் பிரிவு 7 (9)-ன்படி இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என கூறியது.