அ.தி.மு.க.வில் தொடரும் அதிகார போட்டி விடை தெரியாத பல கேள்விகளையும், சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இருவரும் கைகோர்த்த மறுநிமிடமே அவர்களுக்கு எதிராக தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் களம் இறங்கினார்கள்.
கவர்னரை சந்தித்து இந்த ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தார்கள். அதன் பிறகுதான் அரசியல் சூடு பிடித்தது.
மெஜாரிட்டி பலம் இல்லாததால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தனக்கு இட்ட கட்டளையை மின்னல் வேகத்தில் வந்து நிறைவேற்றி வைத்து விட்டு மின்னல் வேகத்தில் அவரும் சென்று விட்டார்.
இப்போது பந்து கவர்னர் பக்கம் திருப்பப்பட்டுள்ளது. அவர் என்ன செய்யப் போகிறார்? என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.
தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வராது. அதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அப்போது முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நெருங்கி வருவதாகவே கருதப்படுகிறது.
எடப்பாடி அரசு கவிழும் ஆபத்து அதிகம். அதை சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று எடப்பாடி அணியினர் ஆலோசித்து வருகிறார்கள்.
தினகரன் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேண்டும். அல்லது அவர்களின் பதவியை பறிக்க வேண்டும். இந்த இரு வழிமுறைகளும் உள்ளன. இதில் பதவியை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதில் சட்ட சிக்கல் உள்ளது.
இதே போன்ற நிலைமை கர்நாடகாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்டது. எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார்கள்.
எடியூரப்பா நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. கொறடா உத்தரவையும் மீறி 19 எம்.எல்.ஏ.க்களும் துணிந்து நின்றார்கள்.
அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றால் எடியூரப்பா ஆட்சி கவிழும் என்பது உறுதியானது. இதனால் கடைசி நேரத்தில் சபாநாயகர் 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறித்தார். இதன் காரணமாக எடியூரப்பா அரசு தப்பியது.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் பதவி பறிக்கப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்தது.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையும் அதே போன்றதுதான். ஆட்சியை காப்பாற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க சபாநாயகர் முயற்சிக்கலாம்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பார்த்தால் அந்த மாதிரி நடவடிக் கையை சபாநாயகர் மேற்கொண்டாலும் பதவியை பறிக்க முடியாது.