செய்திகள்

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பு:

இலங்கை வடக்கு மாகாணத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் பதவி விலகும்படி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். நேற்று நடந்த வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வின்போது இதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அதிரடி முடிவினால் ஆளும் தமிழ் தேசிய கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. வட மாகாண சபையில் உள்ள மொத்தம் உள்ள 38 உறுப்பினர்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் சேர்ந்து கையெழுத்திட்டு, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரேயிடம் தீர்மான கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.

அந்த தீர்மான கடிதத்தில், சி.வி.கே.சிவஞானத்தை புதிய முதலமைச்சராக நியமிக்கும்படி பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து சட்டசபையில் முதலமைச்சர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் அலுவலகம் கடிதம் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.