ஊத்துக்கோட்டை:
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இந்த ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் தமிழக பொதுப் பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த 1-ந் தேதி வந்தடைந்தது.
2-ந் தேதி பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள விவசாயிகள் மின் மோட்டார்களை கொண்டு தண்ணீர் திருடுவதால் பூண்டி ஏரிக்கு குறைந்த அளவிளான தண்ணீர்தான் வந்து சேர்ந்தது.
இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.
விவசாயிகள் தண்ணீர் திருடுவதால் பூண்டி ஏரிக்கு வெறும் வினாடிக்கு 260 கனஅடி தண்ணீர்தான் வருகிறது. எனவே கூடுதல் தண்ணீரை திறந்து விவசாயிகள் தண்ணீர் திறக்கவும், விவசாயிகள் நீர் திருடுவதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று நேற்று இரவு முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நீர் தமிழக எல்லையான தாமரைபாக்கம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 386 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கணிசமான உயர்ந்து வருகிறது.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.257 டி.எம்.சி. ஆகும். இன்று காலை 4 ஏரிகளில் 4.869 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
இந்த தண்ணீரை கொண்டு இந்த வருடம் சென்னையில் குடிநீர் பிரச்சனை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 27.75 அடியாக பதிவானது. 1273 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஏரிகளில் குடிநீர் தேவையை சமாளிக்கும் அளவுக்கு நீர் இருப்பதால் சென்னையில் வீடுகளுக்கு மெட்ரோ வாட்டர் சப்ளை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 650 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யப்பட்டு வந்ததில் தற்போது 810 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது வீடுகளுக்கு குடிநீர் நேரடியாக சப்ளை செய்யப்படுவதால் லாரிகளின் எண்ணிக்கை 5,300 முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் தற்போது போதிய அளவு நீர் இருப்பால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
இப்போது புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது கல்குவாரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. கோடை காலங்களில் தட்டுப்பாடான நேரத்தில் தேவைப்படும் போது சிங்கராயர் பாளையம் உள்ளிட்ட இடங்களில் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றார். #tamilnews