செய்திகள்

முதன்முதலாக நேருக்குநேர் சந்திக்கும் அமெரிக்கா - வடகொரியா ‘தலை’கள்

தென்கொரியாவுக்கு வருகை தந்துள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை மற்றும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. #WinterOlympics

மாலை மலர்

சியோல்:

அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள், அதிர வைக்கும் அணுகுண்டு சோதனை என கடந்த ஆண்டில் அமெரிக்கா மட்டுமல்ல சர்வதேச நாடுகளுக்கும் பீதியை கொடுத்துக்கொண்டே இருந்தது வடகொரியா. தடைகள் மேல் தடைகள் ஐ.நா.விடம் இருந்து வாங்கினாலும் சற்றும் உறுதி குலையாமல் செருக்குடன் இருந்தார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்.

பெட்ரோல், நிலக்கரி என மிக அத்தியாவசிய பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என அமெரிக்காவின் பின்னணியில் ஐ.நா தனது தடைகளை வலுவாக இறுக்க கிம் ஜாங் உன் சற்றே அமைதியானார். கூப்பிடும் தொலைவில் நெருக்கமான உறவில் இருந்த சீனாவும், ரஷ்யாவும் இந்த விஷயத்தில் அமெரிக்காவின் பக்கம் நின்றன.

2018-ம் ஆண்டு பிறந்ததில் மணமாற்றம் அடைந்தாரோ என்னவோ, தனது பரம எதிரி நாடான தென்கொரியாவில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கும் என அறிவித்தார். கிம்மின் இந்த முடிவை அனைவரும் வரவேற்றனர். அதோடு, ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க 500 வீரர்களுடன் 22 உயர்மட்ட அதிகாரிகளை அங்கு அனுப்பிவைத்துள்ளார்.

வடகொரியாவின் பாராளுமன்ற தலைவர் கிம் யாங் நம் தலைமையில் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோர் குழுவாக இன்று சென்றுள்ளனர். இதன்மூலம் கிம் வம்சத்தில் தென்கொரியா மன்னில் கால் பதித்த முதல் நபர் என்ற பெருமையை கிம் யோ ஜங் பெற்றுள்ளார்.

தென்கொரியாவின் பியூங்சங் நகரில் இன்று நடக்க உள்ள தொடக்க விழாவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். தொடக்க விழாவின் போது வடகொரிய தலைமைகளான கிம் யாங் நம், கிம் யோ ஜாங் ஆகியோர் விழா மேடையில் அமர உள்ளனர். அப்போது, மைக் பென்ஸ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

சந்திக்கும் போது ஏதாவது பேசுவார்களா? அல்லது கண்டுகொள்ளாமல் போய்விடுவார்களா? என பல்வேறு கேள்விகள் அனைவரிடமும் எழுந்துள்ளன. #WinterOlympics #US #NorthKorea #TamilNews