செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைந்தது

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் நேற்று இணைந்தது.

மாலை மலர்

பாட்னா:

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் நேற்று இணைந்தது.

பீகாரில் 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத்தின் மகனும், துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவருமான தேஜஸ்வி யாதவ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனால் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கும் லாலுபிரசாத்துக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நிதிஷ்குமார் கடந்த 26-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறுநாளே பா.ஜனதா கூட்டணியில் இணைந்து மீண்டும் பீகார் முதல்-மந்திரி ஆனார்.

இதனால் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் எம்.பி.க்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி 2 ஆக பிளவுபட்டது. எனினும் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு உள்ளதால் நிதிஷ்குமாரின் கையே கட்சியில் ஓங்கி இருக்கிறது.

இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும்படி பா.ஜனதா தலைவர் அமித்ஷா, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இது தொடர்பாக ஆலோசனை நடத்த ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் பாட்னா நகரில் உள்ள முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் சரத்யாதவின் ஆதரவாளர்கள் நிதிஷ்குமார் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த மாவட்ட ஐக்கிய ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

இதை படம் பிடித்த பத்திரிகை மற்றும் டெலிவிஷன் புகைப்படக் கலைஞர்கள் பலர் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் சரத்யாதவின் ஆதரவாளர்களை விரட்டியடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தேசிய நிர்வாக குழு கூட்டத்தை தொடர்ந்து உடனடியாக நடந்த ஐக்கிய ஜனதாதளத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது என்ற தீர்மானத்தை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.