செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி: நிர்மலா சீதாராமன்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இன்றுடன் 1 ஆண்டு நிறைவு பெறுகிறது. இதில் நாட்டுக்கு பல நன்மைகள் ஏற்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பால் பயங்கரவாதிகளிடம் இருந்த பணம் முடக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு செல்லும் பணம் தடுக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்திருந்தோம். அதை துணிச்சலாக பிரதமர் செயல்படுத்தி இருக்கிறார்.

கள்ள நோட்டுகள் நாட்டில் 500, 1000 ரூபாய் வடிவில் நிறைய புழக்கத்தில் இருந்தது. அது ஒழிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் ரொக்க பரிவர்த்தனையை விட்டு விட்டு காசோலை அல்லது டிஜிட்டல் பணவர்த்தனை மூலம் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்த முயற்சி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய நோக்கத்துக்காக செய்யப்பட்டது.

ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இதுபற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விமர்சனம் செய்வது எனக்கு மனவேதனையை தருகிறது.

ஏனென்றால் அவர் நாட்டின் பிரதமராக இருந்தவர். மிகப்பெரிய பொருளாதார மேதை.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நிறைய தவறுகள் நடந்து கொண்டே இருந்தது. வெளிப்படையாகவே ஊழல் நடந்தது. நீர், நிலம், ஆகாயம் என அனைத்திலும் முறைகேடு நடந்தது. அது இன்று வரை கோர்ட்டில் வழக்காக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஊழலுக்கு அவர் ஒரு கருவியாகத்தான் இருந்தார். அவரை யாரோ பின்னால் இருந்து இயக்கி இருக்கிறார்கள்.

அவர் காலத்தில் ஏராளமான தவறு நடந்திருந்தாலும் ஒன்றுமே தெரியாதது போல் அங்கே இங்கே பார்த்து கொண்டிருந்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது கூட கருப்பு பணத்தை ஒழிக்க கருத்து கூறலாம். ஆனால் அதை விட்டு விட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தவறு என்று கூறுவதை ஏற்க இயலாது. அவரது பேச்சு வேதனை தருகிறது. கருப்பு பணத்தை ஒழிப்பதில் காங்கிரசுக்கு அக்கறை இல்லை.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியும் தொடர்ந்து நடந்து வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து அரசு தொடர்ந்து மக்களிடம் விளக்கி வருகிறது.

வங்கி கணக்கில் சேமிப்பு வைப்பது தவறில்லை. அது வருமானத்துக்கு அதிகமான பணமாக இருந்தால் அதற்கு வரி கட்டி இருக்கிறீர்களா? என்பதை தெரிந்து கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டா? இல்லையா? அதைத் தான் கண்காணிக்கிறோம்.

வாஜ்பாய் காலம் முதல் வலியுறுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதாவை துணிச்சலாக மத்திய அரசு நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்கிறார்கள். இப்போது அரசு திட்டங்களில் இருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. அதை வேறு விதமாக நான் பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.