செய்திகள்

இட்லி மாவு, தீப்பெட்டிக்கான வரி விலக்கு குறித்து ஆலோசனை: நிர்மலா சீதாராமன் பேட்டி

இட்லி மாவு, தீப்பெட்டி போன்றவற்றிற்கு வரி விலக்கு கேட்டுள்ளது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மதுரை:

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம், தொழிற்பேட்டை சங்கங்கள் மற்றும் மடீட்சியா இணைப்பு சங்கங்கள் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரி விலக்க கூட்டத்தை மதுரையில் இன்று நடத்தின.

இந்த கூட்டத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. பற்றி விளக்கம் அளித்தார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருமானத்தை அதிகரிக்க ஜி.எஸ்.டி. கொண்டு வரப்படவில்லை. சமூக வலைதளங்களில் கடலை மிட்டாய்க்கு 18 சதவீதம் வரி, பீட்சாவுக்கு 5 சதவீதம் வரி என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் எந்தவித உண்மையும் இல்லை.

கடலை மிட்டாய்க்கு 5 சதவீத வரி தான் விதிக்கப்பட்டுள்ளது. இட்லி மாவு, சாக்குப்பை, மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஹாலோ பிளாக் செங்கல், தீப்பெட்டி, சாம்பிராணி ஆகியவற்றுக்கு வரி விலக்கு தருமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.

முந்தைய காலம் வரை மாநில அரசு சரக்கு வரியும், மத்திய அரசு சேவை வரியுமாக தனித்தனி வரிகள் போடப்பட்டு வந்தன. தற்போது இவை ஒரே வரியாக வசூலிக்கப் படுகின்றன.

ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது மத்திய நிதி மந்திரி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 29 பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இவர்கள், உணவு உற்பத்தியாளர்கள், வணிக பிரநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்து பேசிதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி உள்ளனர். ஜி.எஸ்.டி.யை கட்சி சார்ந்து பார்க்கக்கூடாது.

தொழில் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தங்கள் தொழிலை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால் தான் பொருட்கள் உற்பத்தி, விற்பனை போன்ற புள்ளி விவரங்கள் கிடைக்கும்.

தமிழகம் தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலம். அதிக பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் வரி விலக்கு கேட்கிறார்கள். இது சம்பந்தமாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கலந்து பேசி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

ஜி.எஸ்.டி.யில் குறைபாடு இருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் தங்களது தொகுதி எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் கலந்து பேசி அவர்களை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பேச செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு இல்லை. ரூ. 20 லட்சத்திற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்களுக்கு மட்டும் தான் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.