செய்திகள்

அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமையா? சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் விசாரணை தொடங்கியது

அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமையா என்பதை நிர்ணயிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் விசாரணை தொடங்கியது.

மாலை மலர்

புதுடெல்லி:

அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமையா என்பதை நிர்ணயிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் விசாரணை தொடங்கியது.

ஆதார் அடையாள அட்டை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்துள்ளனர். இவற்றில், ஒருவரின் அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையா, இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா என்பதை முடிவு செய்வதற்கு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் அமைத்து உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமர்வு, நேற்று தங்களது விசாரணையை தொடங்கியது. ஒரு வழக்குதாரர் சார்பில் மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம், வாதிட்டார்.

அவர் தனது வாதத்தில், “அடிப்படை உரிமையுடன் இணைத்துப்பார்க்க வேண்டிய சில மதிப்பீடுகள் இங்கே உள்ளன. நமது அரசியல் சாசனத்தின் முகவுரையில், அமெரிக்கா மற்றும் சில நாடுகளின் அரசியல் சாசனத்தின் வெளிப்பாடுகள் உள்ளன. சுதந்திரம் என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்பாகும். வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகள் ஏற்கனவே உள்ள இயற்கையான உரிமைகள். அவற்றை நமது அரசியல் சாசனம் கொண்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் வாதிட்டபோது கூறியதாவது:-

எம்.பி. சர்மா மற்றும் கரக் சிங் வழக்குகளின் தீர்ப்புகள் இன்றைய சூழலில், நல்ல சட்டமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; இந்திய அரசியல் சாசனத்தின் கீழ், அந்தரங்க உரிமைக்கு, அடிப்படை உரிமை இருக்கிறதா?

அரசியல் சாசனத்தின் பிரிவு 21, வசிப்பிட உரிமை பற்றி கூறி உள்ளது. அடிப்படை உரிமைகள், அரசியல் சாசனத்தின் பிரிவு 19-ன் கீழ் வருகின்றன.

அரசியல் சாசனத்தின் முகவுரையில், இரண்டு வெளிப்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகும். இந்த இரு வார்த்தைகளும், அரசியல் சாசனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உள்ளார்ந்த உரிமையை வெளிப்படுத்த விரும்புகின்றன. அவ்விரண்டு வார்த்தைகளிலும் அந்தரங்க உரிமை உள்ளடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன், “அந்தரங்க உரிமைக்கான பொது சட்டத்தை விட, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தரங்க உரிமை வரையறைகள் பெரிதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோபால் சுப்பிரமணியம், “ஆமாம், சுதந்திரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள், அந்தரங்க உரிமை மீது தாக்கத்தை ஏற்படுத்தும்” என பதில் அளித்தார்.

மேலும், “அந்தரங்கம் என்பது சுதந்திரத்தின் சாரம்தான். அனைத்து மனித விருப்பத்தேர்வுகளும், சுதந்திரத்தின் நடவடிக்கைதான். அவை அனைத்தும் அந்தரங்க உரிமையை முன் நிறுத்துகின்றன. அவை அடிப்படை உரிமை மட்டுமல்ல, மாற்ற முடியாத ஒன்றும் ஆகும்” என்றும் அவர் வாதிட்டார்.

இந்த அமர்வு, அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையா என்பதை நிர்ணயிக்கிற வகையில் மட்டுமே விசாரணை நடத்தும், ஆதார் திட்டத்துக்கு எதிரான விஷயங்கள் மீண்டும் 5 நீதிபதிகள் விசாரணைக்கு திருப்பி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.