செய்திகள்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

மாலை மலர்

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள் தோட்டக்கலை இணை இயக்குநர் மற்றும் இதர துறையினை சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

விவசாய சங்கங்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 49 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

தோட்டக்கலைத் துறையின் மூலம் அரசாணை எண் 537-ன்படி நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய தாலுக்காவில் மட்டும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது இயங்கி வருகிறது.

மேலும் பந்தலூர் மற்றும் குந்தா தாலூக்காவில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் கொண்டுவர கருத்துரு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அனுமதி பெறப்படும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கொய்மலர் சாகுபடி விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கும் பொருட்டு சென்னை, தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இமாசல பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு நிவாரணம் பற்றியும் மற்றும் அதற்குண்டான மானியம் ஆகிய விபரங்கள் கோரி சென்னை தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் தேனீ பெட்டி, தேனீ குடும்பம் மற்றும் தேன் பிழியும் இயந்திரம் ஆகியவை இதுவரை 38 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பெறப்பட்ட விண்ணப்பத்தினை மூதுரிமை பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்டு மூதுரிமையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்படும் பட்சத்தில் வேறொரு மாவட்டத்திலிருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விபரம் தெரிவிக்கப்பட்டது.