செய்திகள்

சயனிடம் 2-வது முறையாக நீலகிரி எஸ்.பி. இன்று விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளி சயன் விபத்தில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சயனிடம் 2-வது முறையாக நீலகிரி எஸ்.பி. விசாரணை நடத்தினார்.

மாலை மலர்

கோவை:

கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளி சயன் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதையொட்டி அவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

9-வது நாளாக சிகிச்சை பெற்றும் அவரின் உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே சயனிடம் கோவை மாஜிஸ்திரேட்டு செல்வகுமார் வாக்குமூலம் பெற்றார். இதைதொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா , கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

அப்போது சயனுக்கு மூச்சு திணறல் இருந்து வந்ததால் எஸ்.பி. முரளி ரம்பா , விசாரணையை முடித்து கொண்டு கிளம்பினார்.

தற்போது சயனுக்கு உடல்நலம் தேறி விட்டதால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சயன் சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரிக்கு நீலகிரி எஸ்.பி.முரளி ரம்பா இன்று 2-வது நாளாக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.அப்போது ஆஸ்பத்திரியில் இருந்த சயனிடம், கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் பற்றி அவர் விசாரணை நடத்தினார். சயன் அளித்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்து கொண்டார்.

இதற்கிடையே சயனின் சிகிச்சை செலவு ரூ.1 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும் அவரது உடல்நிலை தேறி விட்டது. இருப்பினும் விபத்தில் ஏற்பட்ட காயம் மட்டும் இன்னும் ஆறாமல் உள்ளது.

இதனால் சயனை கைது செய்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளது.