கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சசிகுமார் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை.
இதனை தொடர்ந்து கொலை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 10 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சுபைர் சிக்கினார். டிசம்பர் மாதம் சாய்பாபா காலனியில் முபாரக் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அபு தாகீர் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கைதாகி இருந்தார்.
முக்கிய குற்றவாளிகளான முபாரக், சதாம் உசேன் ஆகியோர் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் பல மாதங்களாக பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பழிக்கு பழியாக சசிகுமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கோவை கணபதியில் ஹக்கீம் என்ற பெயிண்டர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே சசிகுமாரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இருப்பினும் சசிகுமார் கொலைக்கு வேறு ஏதேனும் பின்னணி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதற்கிடையே சசிகுமாரின் குடும்பத்தினர் தமிழக கவர்னரை சந்தித்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சசிகுமார் கொலை வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
மத்திய உள்துறை உத்தரவின்பேரில் தேசிய புலனாய்வு பிரிவு சூப்பிரண்டு எல்.ஆர்.குமார் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இதன்தொடர்ச்சியாக கைதான முபாரக் உள்பட 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது அபுதாகீர் வீட்டில் இருந்து 3 செல்போன்கள், சுபைரின் வீட்டில் இருந்து 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
சசிகுமார் கொலை வழக்கில் கைதானவர்களின் பின்னணியில் யார்-யார்? உள்ளனர் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலையின் பின்னணியில் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கலாமா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே கைதானவர்களின் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சதாம் உசேன், அபுதாகீர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.