புதுடெல்லி:
இந்திய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக உல்பா தீவிரவாத அமைப்புக்கு புதிதாக ஆட்களை சேர்த்தல் மற்றும் அதற்கு நிதி திரட்டுவதற்காக இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அந்த அமைப்பின் தலைவர்களான முகுல் ஹசாரிகா, பரேஷ் பரூவா மற்றும் ககன் ஹசாரியா ஆகியோர் மீது கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ககன் ஹசாரியா கைது செய்யப்பட்டார். மற்ற இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை, இன்று கவுகாத்த சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், முகுல் ஹசாரிகா, பரேஷ் பரூவா மற்றும் ககன் ஹசாரியா ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
‘எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய விவரங்கள் மற்றும் சூழ்நிலை ஆதாரம் சேகரிக்கப்பட்டுள்ளது. பரூவா மற்றும் முகுல் இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மேலும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் திருஸ்டி ராஜ்கோவா மற்றும் உல்பாவின் மூத்த தலைவர்களுக்கு எதிரான விசாரணையும் தொடரும்’ என என்ஐஏ தெரிவித்துள்ளது.