செய்திகள்

தீவிரவாதத்திற்கு நிதியுதவி பெற்றதாக கைது செய்யப்பட்ட ஹிஸ்புல் தலைவர் மகனுக்கு ரிமாண்ட்

தீவிரவாத தாக்குதல்களுக்கு நிதியுதவி பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தலைவரின் மகன் சையது ஷாஹித் யூசுப் 7 நாட்கள் விசாரணைக் காவலில் அடைக்கப்பட்டார்.

மாலை மலர்

புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தேசிய புலானாய்வு அமைப்புனர் (என்.ஐ.ஏ) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் வீட்டில் சில அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் முக்கிய தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாகிதீனின் தலைவர் சையது சலஹுதீனின் மகன் சையது ஷாஹித் யூசுப் டெல்லியில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

2011-ம் ஆண்டு முதல் 2014 வரை சிரியாவில் உள்ள முகம்மது பாட் என்பவரிடமிருந்து யூசுப் கணக்குக்கு பணம் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட யூசுப் நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவரை 7 நாட்கள் விசாரணை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.