புதுடெல்லி:
பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்தும்போது உயிரிழப்புகள் ஏற்படுவதால், மாஞ்சா நூல் விற்கவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதிக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ‘பீட்டா’ அமைப்பு சார்பில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கண்ணாடி, உலோகங்கள் மற்றும் பிற கூர்மையான துகள்கள் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் மின்சாரத்தை எளிதில் கடத்தும் திறன் கொண்டவை. எனவே, பட்டம் விடும்போது மாஞ்சா நூல் மின்கம்பியில் உரசினால், பட்டம் விடுபவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதுடன், அந்த வழியாக செல்வோரும் நூலைத் தொட்டால் உயிரிழக்க நேரிடுகிறது என்று பீட்டா தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த வழக்கு பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின் போது மாஞ்சா நூலினால் ஏற்படும் பாதிப்புகள் குறிப்பு பீட்டா தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நைலான் மற்றும் செயற்கைச் சேர்மானத்திலான பொருட்களுக்கு இந்த தடை பொருந்தும் கூறிய நீதிபதிகள், மாஞ்சா நூல்கள் தயாரிக்க, விற்க, வாங்க, பயன்படுத்த அனைத்திற்கும் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுக்ளுக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.
முன்னதாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நாடு முழுவதும் தடைவிதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.