தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக ஸ்வதந்தர் குமார் கடந்த 2012-ம் ஆண்டு பதவியேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்த ஸ்வதந்தர் குமார் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஸ்வதந்தர் குமார் இன்று ஓய்வு பெற்றார். அடுத்த தலைவர் யார் என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என தீர்ப்பாயம் கூறியுள்ளது.
ஸ்வதந்தர் பதவியில் இருந்த போது பல முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் வழங்கி உள்ளார். 10 ஆண்டுகள் பழமையைன டீசல் வாகனம் மற்றும் 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதித்தது அவரின் முக்கிய முடிவாகும். மேலும், யமுனை மற்றும் கங்கை ஆறுகளை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் பல தீர்ப்புகளை வழங்கினார். டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரித்துவாரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தார்.
அமர்நாத் கோவிலில் நாள் ஒன்றிற்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வரவேண்டும் மற்றும் கோவிலுக்குள் அமைதிகாக்க வேண்டும் என்பது சமீபத்தில் அவர் அளித்த உத்தரவு ஆகும்.
புதுடெல்லியில் தலைமை நீதிமன்றத்தை கொண்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகளை பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைவில் விசாரணை செய்ய இது உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.