ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய தொடர் சாம்பியன்ஸ் லீக். இந்த தொடரில் குரூப் நிலை போட்டிகள், லீக் ஆட்டங்கள் முடிவில் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் கொண்ட நாக்அவுட் சுற்றில், ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் லெக்-1, லெக்-2 என சொந்த மற்றும் எதிரணி மைதானங்களில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து எந்த அணி அதிக கோல் அடிக்கிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக கருதப்படும்.
16 அணிகள் கொண்ட நாக்அவுட் சுற்றில் பிரான்சின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், ஸ்பெயினின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான ரியல் மாட்ரிட் அணியுடன் மோதுகிறது. ரியல் மாட்ரிட் அணி 12 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறும். ஆனால் 2011-க்குப்பிறகு ஒருமுறை கூட அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது கிடையாது.
கடந்த சீசனில் 16 அணிகள் கொண்ட சுற்றில் பார்சிலோனாவை எதிர்கொண்டது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். தனது சொந்த மைதானத்தில் 4-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. ஆனால், பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடந்த 2-வது லெக்கில் 1-6 என படுதோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்த சீசனில் பி.எஸ்.ஜி. அணி பார்சிலோனாவிற்காக விளையாடிய நெய்மரை சுமார் 264 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. அத்துடன் மொனாகோ அணியில் விளையாடிய பப்பே-ஐ லோனுக்கு வாங்கியுள்ளது. இவர்களுடன் கவானி உள்ளார். இந்த மூவரால் பி.எஸ்.ஜி. லீக்-1 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்நிலையில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற முடியும் என நெய்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெய்மர் கூறுகையில் ‘‘ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான போட்டி மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.
கடந்த ஒரு வருடமாக இணைந்து சிறப்பான ஆட்டத் வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம். எங்களால் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்த முடியும். எங்களால் வரலாற்றை உருவாக்க முடியும். எங்களுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எப்போதும் வெற்றிக்காகவே செல்வோம்’’ என்றார்.