செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு- நியூஸ்-7 சேனல் கருத்து கணிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நியூஸ்-7 சேனல் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி மற்றும் டி.டி.வி.தினகரன் அணி ஆகியோருக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆனால் வெற்றிக்கனியை தட்டி பறிக்க அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிப்பதற்காக தனியார் அமைப்புகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் சர்வே எடுத்து முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

முதலில் வெளியான ஒரு கருத்து கணிப்பில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. நேற்று மக்கள் ஆய்வு கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் டி.டி.வி.தினகரன் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் டுடே சாணக்யாவும், நியூஸ்-7 சேனலும் இணைந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு கருத்து கணிப்பை நடத்தின. ஏராளமானவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அந்த சர்வே நடத்தப்பட்டு இருந்தது. நேற்று பிற்பகல் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. மதுசூதனனுக்கு 29.7 சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்கு 23.1 சதவீதம் வாக்காளர்களே ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 6 சதவீதம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு 18.7 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்போம் என்று கூறி இருப்பதாக அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி. தினகரனுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு 16.2 சதவீதம் வாக்காளர்களே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மற்ற கட்சிகளுக்கும், சுயேட்சைகளுக்கு வாக்களிக்கப் போவதாக 12.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT