சென்னை:
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. விக்கிரவாண்டியில் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் 32,445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற இருவரும் கடந்த மாதம் 25-ம் தேதி சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது வெற்றிச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற இரண்டு எம்எல்ஏக்களும் இன்று காலை பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக சென்னை வந்த இருவரும், இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பின்னர் காலை 9.30 மணியளவில் சட்டசபையில் சபாநாயகர் பி.தனபால் முன்னிலையில் முத்தமிழ்ச்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். சபாநாயர் அறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய எம்எல்ஏக்கள் இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
எம்எல்ஏக்கள் இரண்டு பேர் இன்று பதவியேற்றதன் மூலம், சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.