செய்திகள்

நியூசிலாந்தின் துணை பிரதமராக வின்ஸ்டன் பீட்டர்ஸ் தேர்வு: புதிய மந்திரிகளின் இலாகா வெளியீடு

நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணி ஆட்சியில், நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் துணை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

மாலை மலர்

நியூசிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் தேசிய கட்சி 56 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 46 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிறிய கட்சியான நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி 9 இடங்களிலும், பசுமைக்கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தேசிய கட்சியும், தொழிலாளர் கட்சியும் ஈடுபட்டன. இந்த தொங்கு பாராளுமன்றத்தில் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி உருவெடுத்தது. அக்கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், தீவிர ஆலோசனைக்குப் பிறகு, ஜெசிந்தா ஆண்டர்னின் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

இதன்மூலம், 10 ஆண்டு காலமாக நீடித்த தேசிய கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 37 வயதே நிரம்பிய ஜெசிந்தா ஆண்டர்ன் பிரதமராக நாளை பதவியேற்க உள்ளார். துணை பிரதமர் பதவியை வின்ஸ்டன் பீட்டர்சுக்கு வழங்க ஜெசிந்தா முன்வந்தார். இதுபற்றி பரிசீலனை செய்துவருவதாக பீட்டர்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அப்போது துணை பிரதமர் பதவிக்கு வின்ஸ்டன் பீட்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். மேலும், வெளியுறவுத்துறை மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.  அவரது கட்சியைச் சேர்ந்த மேலும் 4 உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படுகிறது.

அத்துடன், புதிய மந்திரி சபையில் இடம்பெறும் மந்திரிகளுக்கான இலாகா விவரங்களை ஜெசிந்தா வெளியிட்டார். குழந்தை வறுமை குறைப்பு, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை ஆகிய இலாகாக்களை ஜெசிந்தா கவனிப்பார்.

தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூவுக்கு நீதித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பசுமைக் கட்சியின் தலைவர்களான ஜேம்ஸ் ஷா-வுக்கு பருவநிலை மாற்றத்துறையும், யூஜீன் சேஜ்-க்கு சுற்றுச்சூழல் துறையும் வழங்கப்பட்டுள்ளது.