செய்திகள்

அரசின் கட்டுப்பாடுகளால் கேளிக்கை நிகழ்ச்சிகளை கைவிட்ட புதுவை ஓட்டல் நிர்வாகங்கள்

அரசின் கட்டுப்பாடுகளால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகளை புதுவை ஓட்டல் குறைத்துக்கொண்டது சுற்றுலா பயணிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவைக்கு வார இறுதிநாட்களில் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக புத்தாண்டிற்கு புதுவையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஓட்டல்களில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பாட்டு, நடனம், மது விருந்து, அசைவ விருந்து, இசைக்கச்சேரி, நகைச்சுவை, வண்ண நிகழ்ச்சிகள் என புதுவையில் களை கட்டும். தனியார் விடுதிகள் இதற்காக 15 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது வழக்கம்.

ஓட்டல் நிர்வாகத்தினர் மட்டுமின்றி சில தனியார் அமைப்புகள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் திறந்த வெளியில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து பங்கேற்பர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் ஓட்டல்கள், உணவு விடுதிகள், மது கடைகளில் வியாபாரம் பெருகும். சில மதுபான கடைகளில் புத்தாண்டிற்காக சிறப்பு விருந்துடன் மது வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து புத்தாண்டை வரவேற்பர்.

இந்நிலையில் புதுவை கவர்னர் கிரண்பேடி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேளிக்கை வரியை முறையாக வசூலிக்க வேண்டும். அதோடு நகராட்சிகள் தங்கள் பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதை கண்காணித்து வரியை வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இதனால் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஓட்டல் நிர்வாகங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகளை குறைத்துக்கொண்டன.

நட்சத்திர விடுதிகளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். திறந்த வெளியிலும், மது பாரிலும், உள் அரங்கம், உணவு விடுதி என தனித்தனியே பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பெரும்பாலான நட்சத்திர விடுதிகள் நிகழ்ச்சிகளை குறைத்துக்கொண்டுள்ளது. உணவு அரங்கம், மதுபார்களில் மட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். சில நிர்வாகங்கள் முழுமையாக கேளிக்கை கொண்டாட்டத்தை கைவிட்டுவிட்டன. கடற்கரையை ஒட்டியுள்ள சில விடுதிகள் மட்டும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

வழக்கமான கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இல்லாதது சுற்றுலா பயணிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வரவேற்கலாம் என புதுவைக்கு நம்பி வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.