செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் முக்கிய சுற்றுலா இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.

மாலை மலர்

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடம் முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் வந்து செல்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் கொடைக்கானலில் பசுமையான சூழல் காணப்படுகிறது. தற்போது மழை ஓய்ந்து குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 14டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 5 டிகிரி வரை தட்பவெப்பம் நிலவி வருகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்கமாக புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கடும் குளிர்நிலவி வருகிறது. இதனையும் பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

புத்தாண்டை வரவேற்பதற்காக தனியார் ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

இதற்காக வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர். முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ்வாக், பேரிஜம் ஏரி, பிரையண்ட் பூங்கா, தூண்பாறை உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் உலா வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜனவரி மாதம் வரை இங்கு இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவு பயணிகள் வந்துள்ளதால் ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிந்தன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

புத்தாண்டையொட்டி கொடைக்கானலில் கொண்டாட்டங்கள் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.