தக்கலை:
குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த பத்மநாபபுரத்தில் திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனை உள்ளது.
பத்மநாபபுரம் அரண்மனை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் இதனை கட்டினார். சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் சென்றது.
எனவே தமிழக எல்லைக்குள் இந்த அரண்மனை இருந்தாலும், இப்போது வரை இந்த அரண்மனையின் பராமரிப்பும், பாதுகாப்பும் கேரள அரசின் வசமே உள்ளது.
இந்த அரண்மனை மேற்கு தொடர்ச்சி மலை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 6 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் கட்டிடங்களில் மர வேலைப்பாடுகள், பழங்கால ஓவியங்கள் உள்ளன.
மலர் சிற்பங்கள், கற்கள், செப்புதகடுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள், மன்னர் கால ஆயுதங்கள், நாணயங்கள் உள்ளிட்ட புராதான பொருட்களின் களஞ்சியமாக திகழ்கிறது.
புராதன சிறப்பு, வரலாற்று தகவல்கள் உள்ளிட்ட பழம் பெருமை வாய்ந்த இந்த அரண்மனை பற்றியும், அதன் சிறப்புகளையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டுச் செல்ல கேரள அரசு ஏற்பாடு செய்து வந்தது.
அதன் பயனாக பத்மநாபபுரம் அரண்மனை குறித்த புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது. கேரள அரசின் தொல்லியல் துறை சார்பில் தொடங்கப்பட்ட இந்த இணைய தளத்தை கேரள மந்திரி ராமச்சந்திரன் கடனபள்ளி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் மனிதன் புதுப்புது கண்டு பிடிப்புகளை நிகழ்த்தும் போது அவனது தொடக்கம் மற்றும் வரலாற்று பின்னணியை தெரிந்து கொள்வது அவசியம்.
அதற்கு புராதன சிறப்பு மிக்க பத்மநாபபுரம் அரண்மனை பற்றியும், அதில் உள்ள பழங்கால வரலாறு பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக மக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பழங்கால சிறப்புகளை அறிய விரும்புவோரும் பயன் அடைவார்கள் என்றார்.
கேரளாவில் 179 நினைவிடங்களும், 12 மியூசியங்களும் உள்ளன. அவற்றை கேரள தொல்லியல்துறை பராமரித்து வருகிறது என்றும் கூறினார்.