கோப்புப்படம் 
செய்திகள்

30 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 3½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கும் அபாயம்

இந்தியாவை பொறுத்தவரை இன்னும் 30 ஆண்டுகளுக்குள் 3 கோடியே 60 லட்சம் பேர் கடல் நீர் புகுவதால் வெள்ள பாதிப்புகளை சந்திக்க கூடும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பூமியின் வெப்பம் அதிகமாகி பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பூமி வெப்பம் அதிகரிப்பால் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன.

இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நிலப்பகுதிக்குள் அதிக அளவில் புகுந்துள்ளது.

பூமி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதன் ஆபத்து இன்னும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் புதிய ஆய்வு அறிக்கை ஒன்று அறிவியல் பத்திரிகையான நேச்சர் கம்யூனிகே‌ஷனில் வெளிவந்துள்ளது. ரேடார் தொழில் நுட்பங்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

அதில், எதிர்பார்த்ததை விட கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் ஏராளமான மக்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளை சந்திப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை 2050-ம் ஆண்டுக்குள் 3 கோடியே 60 லட்சம் பேர் கடல் நீர் புகுவதால் வெள்ள பாதிப்புகளை சந்திக்க கூடும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

அது, 2100-ல் 4 கோடியே 40 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை சுமார் 2 கோடியே 10 லட்சம் பேர் மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கடும் பாதிப்பை சந்திக்க கூடும். இத்துடன் மேலும் பலரும் பாதிப்பை சந்திப்பார்கள் என்று அதில் கூறி உள்ளனர்.

கடல் நீர் மட்டம் 20-ம் நூற்றாண்டின் முடிவில் 11-ல் இருந்து 16 செ.மீட்டர் வரை உயர்ந்தது. ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 2 மீட்டர் அளவுக்கு உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி சீனாவில் 8 கோடியே 10 லட்சம் பேரும், வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தில் தலா 2 கோடியே 80 லட்சம் பேரும், இந்தோனேஷியாவில் 2 கோடி பேரும், தாய்லாந்தில் 80 லட்சம் பேரும், பிலிப்பைன்சில் 54 லட்சம் பேரும், நெதர்லாந்தில் 49 லட்சம் பேரும், ஜப்பானில் 41 லட்சம் பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் 2050-ம் ஆண்டுக்குள் 25 கோடி பேர் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உலக அளவில் 11 கோடி மக்கள் மிகவும் தாழ்வான பகுதிகளில் ஆபத்தான இடங்களில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் கண்டிப்பாக பாதிப்பை சந்தித்தே ஆக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.