கோப்பு படம் 
செய்திகள்

தனியார் ரெயில்கள் 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் - நிதி ஆயோக் தகவல்

தனியார் ரெயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கலாம் என நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் 150 ரெயில்களை தனியாருக்கு விடுவதற்காக திட்ட வரைவு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் 11 வழித்தடங்கள் உள்பட 100 வழித்தடங்களில் 150 தனியார் ரெயில்களை அடுத்த ஆண்டுக்குள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி ஆயோக் அறிக்கையில் தனியார் ரெயில்களுக்கான தகுதி விவரங்கள் கட்டண நிர்ணயம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதில் தனியார் ரெயில்களில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக, அதே வழித்தடத்தில் செல்லும் நீண்ட தூர பயணிகள் ரெயில்களில் உள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக இருக்ககூடாது.

தனியார் ரெயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கலாம். குறிப்பிட்ட வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு முன்பு அதே வழித்தடங்களில் செல்லும் ரெயில்களை விட முன்னதாக புறப்பட்டு செல்லும்.

பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் குழுவினரும் தனியார் ரெயில்களில் இருப்பார்கள். 15 நிமிடத்துக்கு மேல் தாமதம் ஆகக்கூடாது.

தனியார் ரெயில்களுக்கு ஏற்கனவே உள்ள யார்டு, பெட்டிகள் பராமரிப்பு செய்யும் பகுதியில் இடம் ஒதுக்கப்படும்.

ரெயில்களை இயக்கும் தனியார் நிறுவனம் சந்தை விலைக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு சலுகை வழங்கலாம். தனியார் ரெயில் நிறுவனங்கள், தங்களது ரெயில்கள், கட்டண விவரங்களின் விளம்பரப்பலகைகளை பயணிகள் பார்க்கும் வகையில் முக்கிய இடங்களில் வைத்து கொள்ளலாம். ரெயில்களை குத்தகைக்கு எடுத்தும் இயக்கி கொள்ளலாம். டிரைவர் பற்றாக்குறை ஏற்பட்டால் ரெயில்வே துறையில் பணிபுரியும் டிரைவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

தமிழகத்தில் சென்னை- பன்வேல் (மும்பை), சென்னை-ஓக்லா (கிழக்கு டெல்லி), சென்னை-ஹவுரா, தாம்பரம்-மதுரை, சென்னை-சர்லாபள்ளி (ஜதரா பாத்) தாம்பரம்- பையப்பன ஹள்ளி, சென்னை-கோவை, தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-திருச்சி, சென்னை-பகத்கி கோந்தி (ராஜஸ்தான்), கன்னியாகுமாரி-தாம்பரம் இடையே தனியார் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து கருத்துக்களை தெரிவிக்க வருகிற 17-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.