செய்திகள்

மாதவன் தூண்டியதாக பொய்யான குற்றச்சாட்டு கைதான வாலிபர் பற்றி தகவல்கள்

போலி அதிகாரி விவகாரத்தில் மீண்டும் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சரண் அடைந்த பிரபாகரன், மாதவன் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று போலீசார் தெரிவித்தனர். #Deepa #Madhavan #FakeITOfficer

மாலை மலர்

சென்னை:

தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் கடந்த 10-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து சோதனை நடத்திய வாலிபர் தப்பி ஓடினார்.

இதுபற்றி தீபாவின் கணவர் மாதவன் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலி அதிகாரியாக நடித்த விழுப்புரத்தை சேர்ந்த வாலிபர் பிரபாகரன் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென போலீசில் சரண் அடைந்தார். அப்போது அவர் பேசிய வீடியோ வாக்குமூலம் ஒன்றும் வெளியானது.

அதில் மாதவனின் தூண்டுதலின் பேரிலேயே நான் போலி அதிகாரியாக நடித்தேன் என்று பிரபாகரன் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி இருந்தார். புதுச்சேரியில் உள்ள எனது ஓட்ட லுக்கு சாப்பிட வந்த மாதவன் சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி சிக்க வைத்து விட்டார். போலி அடையாள அட்டைகளை தயாரித்து மாதவனே கூரியரில் அனுப்பி வைத்தார் என்றும் பிரபாகரன் கூறி இருந்தார்.

என்னை பயன்படுத்தி மாதவன் தீபாவிடம் பணம் பறிக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

போலி அதிகாரியாக நடித்த பிரபாகரன் அளித்த இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதவன் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

இதுபற்றி நேற்று காலையில் மாதவனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் பதில் எதுவும் அளிக்காமல் சென்று விட்டார்.மாதவனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதால் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் போலி அதிகாரி விவகாரத்தில் மீண்டும் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சரண் அடைந்த பிரபாகரன், மாதவன் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பிரபாகரன் பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:-

போலி அதிகாரி பிரபாகரன் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். அதில் ரூ.20 லட்சம் வரையில் அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள்வதற்காக, தீபாவை மிரட்டி, பணம் பறிக்க பிரபாகரன் திட்டமிட்டது தெரியவந்தது.

தீபா மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரூ.1 கோடி மோசடி செய்து விட்டதாக புகார் கூறப்பட்டிருந்தது.

இந்த செய்தியை படித்த பிரபாகரன், அதில் இருந்து கொஞ்சம் பணத்தை பறித்தால் என்ன? என்று திட்டமிட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் போலி அதிகாரியாக மாறியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக இணையதளத்தில் புகுந்து சில வி‌ஷயங்களை பிரபாகரன் தேடியுள்ளார். அப்போது டெல்லியில் இதே போன்று போலி வருமான வரி அதிகாரியாக நடித்த ஒருவரின் அடையாள அட்டை சிக்கியுள்ளது. அதனை அப்படியே பதிவிறக்கம் செய்து தனது போட்டோவை ஒட்டி புதிதாக போலி அடையாள அட்டையை தயாரித்துள்ளார்.

இதனை காட்டித்தான் தீபாவின் வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தி உள்ளார். ஆனால் போலீசார், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் திரண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் மாதவனை சிக்க வைத்துவிட்டு தான் தப்பி விடலாம் என்று கணக்கு போட்ட பிரபாகரன் வாக்குமூலம் அளித்தது போன்று வீடியோவில் பேசி உள்ளார். அந்த வீடியோ காட்சிகள்தான் நேற்று காலையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரண் அடைந்த பிரபாகரனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் பற்றி புகார் அளித்த மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். #Deepa #Madhavan #FakeITOfficer #tamilnews