செய்திகள்

சென்னையில் 100 ரெயில் நிலையங்களில் புதிய உணவகங்கள்

சென்னையில் புறநகர் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக புதிய உணவக கடைகள் திறக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் தினமும் புறநகர் ரெயில்களில் பல லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வரையிலும், சென்ட்ரல் - திருவள்ளூர், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவை நடந்து வருகிறது.

தினமும் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்லும் பொது மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகிறார்கள்.

பொதுமக்கள், பயணிகள் வசதிகாக ஒருசில ரெயில் நிலையங்களில் நொறுக்கு தீனி மற்றும் சிறிய வகை உணவக கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

ரெயில்வே ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இந்த கடைகள் ஏலம் விடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.


பெரும்பாலான புறநகர் ரெயில் நிலையங்களில் நொறுக்கு தீனி கடைகள் உணவகங்கள் இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களில் புதிதாக உணவக கடைகள் திறக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

சென்னை புறநகர் ரெயில் நிலையங்கள், பறக்கும் ரெயில் நிலையங்கள் உள்பட 100 ரெயில் நிலையங்களில் புதிய உணவக கடைகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில மாதங்களில் இக்கடைகள் தொடங்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகின்றன.

முக்கிய ரெயில் நிலையங்களான சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, நுங்கம்பாக்கம், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் கூடுதலாகவும் உணவக கடைகள் அமைக்கப்பட இருக்கிறது.