புதுடெல்லி:
இந்தியாவில் இளங்கலை கல்வியியல் எனப்படும் பி.எட். பட்டப்படிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. பி.எட். பட்டபடிப்பை மேற்கொள்ள மாணவ-மாணவிகள் மூன்று ஆண்டுகள் கல்லூரி படிப்பு நிறைவு செய்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயமாகப்பட்டுள்ளது.
இதனால் ஒரு நபர் பி.எட். பட்டம் பெற 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் பி.எட். கல்வி முறை தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-
பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பை நிறைவு செய்ய தற்போதுள்ள நடைமுறைப்படி 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதனால் மாணவ-மாணவியருக்கு மிகுந்த காலவிரயம் ஏற்படுகிறது.
இதைக் குறைக்க தற்போது கல்லூரிகளில் புதிதாக பட்டப்படிப்பு முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பி.எஸ்சி., பி.ஏ. மற்றும் பி.காம் போன்ற மூன்று வருட இளநிலை பட்டம் பயிலும் மாணவ-மாணவிகள் கூடுதலாக ஒருவருடம் செலவழித்து பி.எட். படிப்பை நிறைவு செய்யலாம்.
அந்த படிப்பை முடிக்கும் நபர்களுக்கு பி.எஸ்சி-பி.எட், பி.ஏ-பி.எட் மற்றும் பி.காம்-பி.எட் என்ற பெயர்களில் பட்டம் வழங்கப்படும். இதனால் பி.எட் படிப்பை நிறைவு செய்ய விதிக்கப்பட்டுள்ள 2 வருடம் என்ற கால அவகாசம் ஒரு வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி கூறினார்.