செய்திகள்

டெல்லியில் கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

டெல்லியில் ரிசர்வ் வங்கியில் புதிய ரூபாய் நோட்டுகள் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #RBI

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் பாராளுமன்றம் அருகே ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இருந்து 10, 20 மற்றும் 50 ரூபாய்க்கான புதிய நோட்டுகள் தினமும் வினியோகிக்கப்படுகிறது. புதிய ரூபாய் நோட்டுகளை பெற, ஆதார் எண் மற்றும் தாங்கள் பெற விரும்பும் ரூபாய்க்கு நிகரான பழைய நோட்டுகளை கொடுக்க வேண்டும். ஒருவர் மாதத்துக்கு 3 முறை இவ்வாறு புதிய பணக்கட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

புதிய ரூபாய் நோட்டுகளை மணமக்களுக்கு கொடுக்கவும், வி.ஐ.பி.களுக்கு பணமாலை அணிவிக்கவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சமூக அந்தஸ்தையும் புதிய நோட்டுகள் தருகின்றன. எனவே புதிய ரூபாய் நோட்டுகள் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி முன் தினமும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர்.

இப்படி பெறும் புதிய ரூபாய் நோட்டுகளை பெரும்பாலானோர் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்கிறார்கள். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கமிஷன் பெறப்படுகிறது. கமிஷன் ஏஜெண்டுகள் ரிசர்வ் வங்கி அருகில் நின்றுகொண்டு, புதிய ரூபாய் நோட்டுகள் வேண்டுமா? என்று வெளிப்படையாகவே கேட்கிறார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணத்தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படும் சூழ்நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளின் வணிக பரிமாற்றம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #ReserveBank #RBI