புதுடெல்லி:
மகாத்மா காந்திக்கு இணையான தேச தலைவராக போற்றப்படுபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி அறப்போராட்டங்கள் நடத்தி வந்த நேரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் ஆயுத போராட்டத்தை நடத்தினார்.
வெளிநாட்டில் இருந்தபடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
2-ம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் திரட்டிய படை ஆங்கிலேயர்களிடம் இருந்த பல பகுதிகளை கைப்பற்றி விட்டு இந்திய மண்ணுக்கள் வெற்றிகரமாக நுழைந்தது.
இந்த நிலையில் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாகவும், அவர் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், நேதாஜி மரணம் அடையவில்லை என்று அவருடைய சகோதரரும், குடும்பத்தினரும் கூறினார்கள். அவர் தலைமறைவாக இருப்பதற்காக இறந்து விட்டதாக செய்தி பரப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
கடைசி வரை நேதாஜி வேறு எங்கும் காணப்படாததால் அவர் இறந்து விட்டாரா? அல்லது உயிரோடு இருக்கிறாரா? என்பது சர்ச்சையாகவே நீடித்து வந்தது.
இது சம்பந்தமாக பல விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனாலும் நேதாஜி விமான விபத்தில் இறந்தாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ரெங்கோஜி கோவிலில் உள்ள சாம்பலை எடுத்து செல்லும்படி இந்தியாவிடம் ஜப்பான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனாலும், அவரது மரணம் உறுதி செய்யப்படாததால் அதை ஏற்று கொள்ளவில்லை.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெளிநாட்டில் படை திரட்டுவதற்கு முன்பாக சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரை சந்தித்தார். பின்னர் அங்கேயே சில ஆண்டுகள் இருந்தார்.
அப்போது ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எமிலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனிதா போஸ் என்ற மகள் இருக்கிறார்.
தற்போது அனிதாவுக்கு 75 வயது ஆகிறது. ஜெர்மனியின் பொருளாதார நிபுணராக திகழ்ந்து வருகிறார். சுபாஷ் சந்திரபோஸ் மரணம் அடையவில்லை என்று அனிதாவின் தாயாரும், தான் உயிரோடு இருந்தவரை கூறி வந்தார். அனிதாவும் அதே கருத்தைதான் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அனிதா போஸ் தனது தந்தையின் மர்மங்கள் குறித்து பிரபல எழுத்தாளர் அசிஸ்ராயுடன் சேர்ந்து ‘லேய்ட் டு ரெஸ்ட்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
இந்த புத்தகம் அடுத்த மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதில், தனது தந்தையை பற்றி மர்ம தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் நேதாஜியின் சாம்பலை எடுத்து அதை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நேதாஜி மரணத்தின் மர்மம் விலகி விடும் என்று கூறி உள்ளார். #tamilnews