வெள்ளத்தை கடந்து செல்லும் மக்கள் 
செய்திகள்

நேபாளத்தில் தொடரும் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

காத்மாண்டு:

நேபாளத்தில் பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி நிதின் கூறியதாவது:-

நேபாளத்தில் மொத்தம் உள்ள 77 மாவட்டங்களில் 64 மாவட்டங்கள் கனமழையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 67 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், இதுவரை 40 பேர் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி மாயமாகியுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ராணுவம் உள்பட அனைத்து பேரிடர் மீட்பு துறைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT