நெல்லை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த வாரம் தீவிபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் தீவிபத்து ஏதும் நிகழா வண்ணம் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுவாக கோவில்களில் சூடம் ஏற்ற தடை அமலில் உள்ளது. சூடம் ஏற்றுவதால் கோவில்களில் சாமி சிலைகள் மற்றும் அந்த பகுதிகள் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது மதுரை சம்பவம் எதிரொலியாக அகல் விளக்கு, நெய் தீபம் ஏற்றுவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் நெய் தீபம், அகல் விளக்கு ஏற்றக்கூடாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி கூறியதாவது:-
நெல்லையப்பர் கோவிலில் வரும் காலங்களில் தீவிபத்துகள் ஏதும் நிகழாவண்ணம் தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சூடம் ஏற்றுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. கண்ட இடங்களில் நெய் தீபம், அகல் விளக்கு ஏற்றக்கூடாது என்றும், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்ற வேண்டும் எனவும் பக்தர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
மேலும் தீபம் ஏற்றக்கூடிய இடத்தில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. மற்ற இடங்களிலும் தீ தடுப்பு கருவிகள் வைக்கப்பட்டு உள்ளது. இதை கையாள்வது எப்படி என்பது பற்றி கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews