கி.வீரமணி 
செய்திகள்

கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் வழக்கு- நெல்லை போலீசார் நடவடிக்கை

கிருஷ்ணரை பற்றி அவதூறாக பேசியதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

நெல்லை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடந்த மே மாதம் சென்னை பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கடவுள் ‘கிருஷ்ணர்’ பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் பேசிய வீடியோ காட்சியை பார்த்த நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீஸ்ரீ ராதா தாமோதர் ஆலய நிர்வாகி சீத்தாபதி தாஸ் (வயது 45) என்பவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை 4-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நெல்லை தச்சநல்லூர் போலீசுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கி.வீரமணி மீது வழக்கு பதிந்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அவதூறாக பேசியதாக 153, 153 (ஏ), 295 (3), 293, ஐ.பி.சி. 505 (1), தகவல் தொழில்நுட்பம் 66 (ஏ) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கி.வீரமணி மீது நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நெல்லை போலீசார் விரைவில் சென்னை சென்று கி.வீரமணியிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.