வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் 73 ஆண்டுகள் சாலை வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மலைக்கிராம மக்கள் யாரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் டோலிகட்டி தூக்கிச்செல்வது வழக்கமாக இருந்து வந்தது. தற்போது மலைக்கிராம மக்கள் 4 கிலோமீட்டர் தூரம் வருவாய்த்துறைக்குட்பட்ட எல்லையைக் கடந்தும், மேலும் 4 கிலோமீட்டர் தூரம் மத்திய அரசு வனத்துறைக்குட்பட்ட எல்லையைக் கடந்தும் ஆக மொத்தம் 8 கிலோமீட்டர் தூரம் கடந்து மலைக்கிராமத்துக்குச் சென்று வந்தனர். அந்த மலைக் கிராம மக்களுக்கு சாலை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.
கடந்த மே மாதம் 21-ந்தேதி அமைச்சர் கே.வி.வீரமணி தலைமையில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் நெக்னாமலை மலைக் கிராமத்துக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட மலைக் கிராம மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். அப்போது மலைக்கிராம மக்கள், நாங்கள் 73 ஆண்டுகளாகப் போதிய சாலை வசதி இல்லாமல் மலைப்பாதையில் சிரமப்பட்டு வருகிறோம் என்றும், எங்களுக்கு சாலை வசதி அமைத்துத்தர வேண்டும் என்றும் அமைச்சர், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு அமைச்சர், சாலை அமைப்பதற்கு மத்திய அரசு வனத்துறை ஒப்புதல் அளிக்க காலதாமம் செய்து வருகிறது. விரைவில் நெக்னாமலை மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெறும் எனத் தெரிவித்தார். மலைப்பகுதியில் சாலை அமைக்கும் பணி தாமதம் ஆவதால் மலைக்கிராம மக்கள் தாமாகவே முன்வந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த ஒரு மாதமாக மண் சாலை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு ஓரளவுக்கு பணிகளை முடித்துள்ளனர். அந்த மலைப்பாதை, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு உள்ளது.
இந்தநிலையில் நெக்னாமலை மலைக்கிராம மக்களுக்கு மீண்டும் கொரோனா ஊரடங்கு கால அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மலைக் கிராம மக்கள் அமைத்த மண்சாலையில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் அரசு வாகனங்களில் சென்று, மண் சாலையை திறந்து வைத்தனர். பின்னர் அவர்கள் நெக்னாமலை மலைக்கிராமத்துக்கு சென்று, மலைக் கிராம மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர்.
தற்போது தற்காலிகமாக மண் சாலை அமைத்த மலைக்கிராம மக்களுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர். அப்போது மலைக்கிராம மக்களிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர். அப்போது மலைக்கிராம மக்கள், நாங்கள் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலை அமைத்ததன் மூலம் எங்களின் 73 ஆண்டுகளாக கனவு நிறைவேறியதாக, கூறினர். அதற்கு அமைச்சர்கள், மலைக்கிராம மக்கள் அமைத்த மண் சாலையை விரைவில் தார் சாலையாக அமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவார்கள், என உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தி, பாஸ்கர், தாசில்தார் சிவபிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனிசாமி, நகர செயலாளர் சதாசிவம், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், பூங்குளம் மகேந்திரன், முன்னாள் ஜோலார்பேட்டை ஒன்றியகுழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.