செய்திகள்

நேருபூங்கா-சென்ட்ரல் இடையே மெட்ரோ சுரங்கம் அமைக்க 6 ஆண்டுகள் போராடிய குழுவினர்

நேரு பூங்கா - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை 6 ஆண்டுகள் கடினமாக போராடி சுரங்க குழுவினர் உருவாக்கி உள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - நேரு பூங்கா வரையில் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்பட்டு வருகிறது.

நேரு பூங்கா - சென்ட்ரல் இடையேயான 2½ கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை அமைப்பு பணிகள் மிகவும் கடினமாக இருந்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக மெட்ரோ சுரங்க குழுவினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் உருவாக்கி உள்ளனர். சுரங்கப்பாதை அமைக்கும் போது கடின பாறைகள், களிமண் ஆகியவற்றால் மிகவும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

சுரங்கம் தோண்டும் போது ஆங்காங்கே தண்ணீர் ஊற்று உருவாகி பீய்ச்சி அடித்ததால் பணிகளின் போது சிறிது தடைகள் ஏற்பட்டு உள்ளன. பாறைகளை உடைக்கும் போது சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அவ்வப்போது பழுது ஏற்பட்டன.

இந்த நிலையில் நேரு பூங்கா - சென்ட்ரல் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது மின்விளக்கு, குளிர் சாதன வசதிகள், காற்றோட்ட வசதிகள், சிக்னல், தொலை தொடர்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. சென்ட்ரல் - விமான நிலையம் வரை நேரடியாக பயணிகள் பயணம் செய்ய முடியும். 2½ நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே 3 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4 நுழைவுப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் எழும்பூர் சுரங்க ரெயில் நிலையம் பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் - விமான நிலையத்துக்கு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து விடப்படுகிறது. இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெறும். #MetroTrain #Tamilnews