செய்திகள்

நேரு பூங்கா-சென்ட்ரல் இடையே ஜனவரி மாதம் சுரங்க ரெயில் சோதனை ஓட்டம்

நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே ஜனவரி மாதம் சுரங்க ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. பிப்ரவரி மாதம் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

மாலை மலர்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடைபெற்று வருகிறது.

நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. தற்போது தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வருகிற ஜனவரி மாதம் நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயில் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ஆய்வு நடத்துகிறார்கள்.

ஆய்வுக்குப்பின் அனுமதி கிடைத்ததும் நேரு பூங்கா சென்ட்ரல் சுரங்கப்பாதையில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது.

இந்த பயணிகள் சேவை சென்ட்ரல் -விமான நிலையம் வரை நீட்டிக்கப்படுகிறது. இனிமேல் சென்ட்ரல்- விமான நிலையம் வரை பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியும்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நேரு பூங்கா-சென்ட்ரல் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளன. தண்டவாளம், சிக்னல், தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெறுகிறது.

சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான சுரங்கப் பணிகளும் முடிவடைந்து உள்ளன.

இந்த பணிகளை ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் நேரடியாக ஆய்வு செய்கிறார். அவரது ஆய்வுக்கு பின் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படும். இதற்கான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.