அனைத்து போட்டிகளிலும் வங்காள தேச அணி தோல்வியை தழுவியது. ஒரு போட்டியில் கூட தென்ஆப்பிரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டிய கூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வரும் வங்காள தேச அணி, தென்ஆப்பிரிக்காவில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட ஒட்டுமொத்தமாக 300 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. ருபெல் ஹொசைன் மட்டுமே 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆறுதல் அளித்துள்ளார்.
டெஸ்ட் தொடரில் மோசமான விளையாடியதன் மூலம் வங்காள தேச வீரர்கள் தன்னம்பிக்கையை இழந்தனர். அது டி20 கிரிக்கெட் வரை தொடர்ந்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடாத சாஹிப் அல் ஹசன் டி20 அணிக்கான கேப்டனாக செயல்பட்டார். நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசம் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து சாஹிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் நாங்கள் மோசமாக விளையாடியதற்கு முக்கிய காரணம், டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததுதான். அது ஒருநாள் போட்டியை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டிலும் தொற்றிக் கொண்டது. இது வைரஸ் போன்றது.
நாம் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தால், ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி இருப்போம். அதை விட சிறப்பாக டி20 கிரிக்கெட் தொடர் அமைந்திருக்கும்.
இது எப்படி வேலை செய்கிறது என்றால், வீரர்கள் டிரெஸ்ஸிங் அறையில் இருக்கும்போது விமர்சனங்கள் எழும். அணி வெற்றி பெறுகின்றபோது, மனநிலை வேறுமாதிரி இருக்கும். ஒவ்வொரு வீரரும் வெற்றி பெற்றதை பற்றிதான் பேசுவார்கள்.