‘நீட்’ வேண்டாம், இதனால் நான் மட்டுமல்ல என்னைப்போல் இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை துணிச்சலுடன் தட்டிய இந்த இளந்தளிரின் இதயம் எவ்வளவு மென்மையானது? தன் ஆசை கனவு தகர்ந்துவிட்டதை நினைத்ததும் அந்த இதயமும் நின்றுவிட்டதே!
ஸ்டெதஸ் கோப் கழுத்தில் தொங்க வலம் வந்திருக்க வேண்டியவர் கழுத்தில் பூமாலைகளுடன் பிணமாகி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
என்ன கொடுமை இது! இதயம் விம்முகிறதே! நீட்டை உன் வீட்டோ பவரால் வீழ்த்தி சாதித்து இருக்க வேண்டிய நீ வீழ்ந்துவிட்டாய் என்றதும் மொத்தமாய் எல்லோரும் குழுமூரை நோக்கி கண்ணீர் வடிக்கிறார்கள்.
விஸ்வரூபமெடுத்து எதிரில் நிற்கும் நீட்டை சந்திக்க இன்னும் 3 வாய்ப்புகள் இருக்கிறதே. பிளஸ்-2 வைப் பூ வென்று ஊதித்தள்ளி 1176 மதிப்பெண் அள்ளிய உனக்கு நீட் எம்மாத்திரம்?
உன்னால் முடியும்! ஆனால் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டாய்! என்றுதான் துடிக்கிறோம். வாழ்க்கையில் சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே என்பார்களே! தடுமாறிய உன்னை தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்ல அன்னை இல்லை. தந்தையும் அருகில் இல்லை. பாவம், நீ என்ன செய்வாய்? சின்ன இதயம் எத்தனை அழுத்தங்களைதான் தாங்கும்?
வாழ்க்கையில் அழுத்தங்களை மட்டுமே சுமந்தவளாயிற்றே!
தன்னை போன்ற சிறுமிகளெல்லாம் பாவாடை சட்டையுடன் குழுமூரில் துள்ளித்திரிந்த காலத்தில் தாயை இழந்து தனிமரமாகிவிட்டாள்.
தாயின் கரம் பற்றி சந்தோசத்தை அனுபவித்ததில்லை. அம்மா போதுமம்மா..... போதுமம்மா.... என்று கூழை பிசைந்து வலுக்கட்டாயமாக ஊட்டிய போது அம்மாவிடம் சிணுங்கிய அனுபவமில்லை.
தலைவாரி, பூச்சூடி, புத்தக பையை தோளில் மாட்டி, டாடா காண்பித்து போய்வா என்று பள்ளிக்கு அனுப்பும் தாய்மர்களை பார்க்கும்போது தனிமையாய்- வெறுமையாய் நடக்கும் அனிதாவின் இதயம் வலிக்கும்.
அம்மா இல்லையே என்று ஏங்கிய அனிதாவை தாங்கிப்பிடித்தார் தந்தை.
சொத்து பத்து எதுவும் இல்லை. இருக்கும் சொத்து இந்த 5 முத்துக்களும்தான். தோளில் சுமந்த பிள்ளைகளுக்காக திருச்சி காந்திமார்க்கெட்டில் முதுகில் மூட்டையை சுமந்தார். தாங்க முடியாத பாரமும் சுமையாக தெரியவில்லை. சுகமாகத்தான் தெரிந்தது.
நாலு எழுத்து படிக்காத தனக்கு தன் பிள்ளைகள் படிப்படியாக படித்து முன்னேறி கொண்டிருந்தது எத்தனை பெரிய சுமைகளையும் தாங்கும் வலைமையை கொடுத்தது.
அப்பா, நீ கவலைபடாதே! இன்னும் கொஞ்சநாள் தான் நாங்கள் எல்லோரும் நல்லா படிச்சு வேலைக்கு போய் உன்னை மகாராஜா மாதிரி வைத்து காப்பாத்துகிறோம் என்று சொல்லும் போதெல்லாம் அந்த அப்பாவி தந்தை வாழ்க்கையில் சந்தித்த வலிகளையும், சோகங்களையும் மறந்து வாய்விட்டு சிரிப்பார்.
எல்லோரும் என்ஜினீயர்கள் என்பார்கள். அனிதா மட்டும் நான் டாக்டர் தான் என்பாள்.
ரொம்ப ஆசைபடாதே, டாக்டருக்கு படிக்க வைக்கும் அளவுக்கு நம்மிடம் வசதி இருக்கா? என்று சகோதரர்கள் ஏக்கத்துடன் கேட்கும் போதெல்லாம் ‘அண்ணே நீ கவலைபடாதே. நான் நல்ல மார்க் வங்கி அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்று விடுவேன்’ என்று தைரியமாக தெரிவித்துள்ளார்.
தங்கள் பாசமலருக்காக நான்கு சகோதரர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்ய தவறவில்லை. விடுமுறை நாட்களில் அவர்களும் கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து படிப்புக்காக செலவிட்டார்கள்.
ஒண்டியிருக்க சின்னதாய் ஒரு வீடு, வயதுக்கு வந்துவிட்ட அனிதாவுக்கு இயற்கை உபாதையை கழிக்க ஒரு கழிப்பறை கூட இல்லாத துர்பாக்கியம்.
கூரைக்குள் முடங்கி கிடந்தாலும் அனிதாவின் ஆசை மட்டும் கோபுரமாக உயர்ந்து நின்றது.
டாக்டராக வேண்டும், அதற்காக படிப்பு... படிப்பு... அதுமட்டும்தான் என்வேலை என்று படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.
உள்ளூர் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண் வாங்கிய அனிதாவை குன்னம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி கட்டணமில்லாமல் சேர்த்துக்கொண்டது.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்களை அள்ளிவிட்டார்.
தமிழில் 195, ஆங்கிலத்தில் 188, கணிதத்தில் 200, இயற்பியலில் 200, வேதியலில் 199, உயிரியலில் 194. மருத்துவம் படிக்க தேவையான கட்-ஆப் மதிப்பெண் 196.75 கிடைத்துவிட்டது. அனிதாவுக்கு ஆனந்தம்! அப்படி ஒரு ஆனந்தம்! இதை கொண்டாட அம்மா ஆனந்தி இல்லாவிட்டாலும் அம்மா நான் டாக்டராக போன்றே என்று துள்ளிக்குதித்தாள்.
ஆனால் அன்பு மகளே அனிதா... உன் அன்பில் நனைந்து வாழ்க்கையை அனுபவிக்க முடியாத அபாக்கிய வதியாகிவிட்டேன். நீயும் என்னைபோல் அபாக்கியவதி ஆகப்போகிறாயே என்று அந்த தாயின் ஆன்மா நிச்சயம் கண்ணீர் வடித்திருக்கும்.
மருத்துவக்கல்லூரி கலந்தாய்வுக்கு தயாரான அனிதாவுக்கு ‘நீட்’ எழுதி பாசானால் மட்டும்தான் முடியும் என்ற அறிவிப்பு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதைபோல் இருந்தது.
சட்டமோ, திட்டமோ அது எல்லோருக்கும் சாதகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நீட் அனிதாவை போன்றவர்களுக்கு பாதிப்பாகத்தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் நம்பிக்கையை ஊட்டியது. ஆனால் அதை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க வலியுறுத்தி மாணவி அனிதா மனு செய்தார். அப்போது கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அனிதா கூறும்போது, நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்கள் என்று சொல்வதை விட ஏழை, எளிய மாணவர்களுக்கு ரொம்பவும் கஷ்டம்.
எங்களுக்கு நீட் தேர்வுக்கான கோச்சிங்கிளாஸ் செல்ல வழியும் இல்லை, வசதியும் இல்லை. அதற்கான வாய்ப்பு சற்றும் கிடையாது. பிளஸ்-2 தேர்வு அடிப்படையில்தான் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அப்படி கேள்விகள் கேட்கப்படவில்லை.
எங்கள் ஊரிலேயே இரண்டு அல்லது 3 பேர் தான் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தோம். அதில் யாரும் மருத்துவம் படிக்க தேர்வாகவில்லை. எங்களிடம் என்ன தகுதி இருக்கிறதோ அதைக்கொண்டு தான் நாங்கள் முன்னேற முடியும்.
தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொடுத்து விடும் என்று நம்பினேன். அந்த கனவும் தகர்ந்து விட்டது.
நான் எப்படியாவது டாக்டராக வேண்டும்.... டாக்டராக வேண்டும் என்று நீதி தேவனின் வாசலில் அனிதா வடித்த கண்ணீருக்கு எந்த பலனும் இல்லாமல் போய் விட்டது.
இந்த ஆண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லை. இனி ‘நீட்’-ஐ எதிர்கொண்டு சாதிக்க முடியுமா? என்ற நம்பிக்கையும் இல்லை.
கை நழுவி போனது மருத்துவ கனவு. கைவிட்டு போனது நம்பிக்கை. வாழ்க்கை என்பது கனவு காண்பது. அந்த கனவு நனவாகாமல் போனால் வாழ்க்கை சுவைக்காது.
அப்படித்தான் அனிதா வுக்கும் வாழ்க்கை வெறுத்துப் போனது. நினைத்தது நடக்காவிட்டால் வாழ்க்கையே முடித்துக் கொள்வதுதான் சரி என்ற தவறான முடிவை எடுத்து விட்டார்.
வாழ்க்கை வாழ்வதற்குத் தானே. சாவதற்கா? பரந்து விரிந்த உலகில் வாழ்க்கைக்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. சாவு ஒன்றா வழி?
அறிவாற்றலும் - தைரியமும் நிறைந்தவர் அனிதா. அவரால் நீட்டையும் சந்திக்க முடியும்! ஆனால் அந்த தைரியத்தை ஊட்ட வில்லையே!
ஆற்றல் இருந்தாலும் அதை தட்டி எழுப்ப வேண்டுமல்லவா? எல்லையற்ற ஆற்றல் இருந்தும் அதை சுட்டிக்காட்ட, தட்டி எழுப்ப அனுமனுக்கு ஒரு ஜடாயு தேவைப்பட்டதல்லவா? பாவம், சாமானிய மனிதனுக்கும் அப்படி ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது. அது கிடைக்கவில்லையே!
துணிச்சல் மிக்க பெண்ணின் முடிவா இது? என்று நினைத்தாலும் வாழ்க்கையில் விரக்தி அடையும் போது இப்படிப்பட்ட முடிவுக்குத்தான் செல்வார்கள்.
போராடி பார்த்தேன் முடியவில்லை. என்னையே நான் முடித்துக் கொள்கிறேன் என்று அனிதா தன்னையே முடித்து கொண்டார்.
தைரியம் நிறைந்த ஒரு பெண் எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று நினைக்கும் போது என் சாவின் மூலமாவது பலரது கனவுகள் நிறைவேறட்டும் என்று முடிவு செய்து விட்டார் போலும்.