நீட் தேர்வு மோசடி 
செய்திகள்

நீட் தேர்வு மோசடி - ஆள்மாறாட்ட மாணவர் தலைமறைவு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் தலைமறைவாக இருப்பதால் அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர தமிழ்நாட்டில் கடந்த 2016-2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி தகுதி உள்ள மாணவர்கள் டாக்டர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

ஆனால் நீட் தேர்விலும் ஆள்மாறாட்ட தில்லுமுல்லு செய்து மருத்துவக் கல்லூரியில் சில மாணவர்கள் சேர்ந்து இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருப்பது முதலில் அம்பலமானது.

அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது ராகுல், பிரவின், அபிராமி, இர்பான் ஆகிய 4 மாணவர்களும் ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதோடு இடைத்தரகர்களாக திருவனந்தபுரம், மும்பை மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு இருப்பதும் தெரிந்தது. லட்சக்கணக்கான ரூபாய் கைமாறி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.ராகுல், பிரவின், அபிராமி உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்கள் 5 பேரும் தேனி அழைத்துச் செல்லப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று விசாரிக்கப்பட்டனர். நேற்று விசாரணை முடிந்ததை தொடர்ந்து பிரவின் மற்றும் அவரது தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 பேரிடமும் இன்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆள்மாறாட்டம் புகாருக்கு உள்ளாகி இருக்கும் மாணவர் இர்பான் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இர்பான் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள படித்து வருகிறார்.

சமீபத்தில் ஆள்மாறாட்டப் புகார்கள் வெளியானதும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு எம்.பி. பி.எஸ். படிப்பில் 100 பேர் சேர்க்கப்பட்டனர்.

அந்த 100 பேரின் சேர்க்கை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது இர்பான் மட்டும் ஆவணங்களை ஒப்படைக்க வில்லை. கடந்த 9-ந்தேதி அவர் குடல்இறக்கம் நோய் சிகிச்சைக்காக விடுப்பில் சென்றார். விடுதியில் தங்கியிருந்த அவர் தனது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் அவரை தொடர்பு கொண்டு முதலாம் ஆண்டு மருத்துவ சேர்க்கை ஆவணங்களை பெற முயற்சி நடந்தது. ஆனால் இர்பான் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மாணவர் இர்பானின் வாணியம்பாடி வீட்டு முகவரிக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரிஜிஸ்டர் தபால் அனுப்பப்பட்டு உள்ளது. செப்டம்பர் 30-ந்தேதி (திங்கட்கிழமை) முதலாம் ஆண்டு சேர்க்கை ஆவணங்கள், நீட் தேர்வு ஆவணங்கள், ஹால்டிக்கெட் மற்றும் மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று இர்பானுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால் இர்பான் நாளை ஆஜர் ஆவாரா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இர்பான் தலைமறைவால் அவர் ஆள்மாறாட்டம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. நாளை அவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆஜர் ஆகாதபட்சத்தில் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர் இர்பான் மொரிஷியஸ் நாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சிலருக்கு இர்பான் தப்பி சென்று விட்ட தகவல் தெரிய வந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் எப்போது? எப்படி? தப்பி சென்றார் என்பது போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

போலீசார் கைது செய்து துன்புறுத்துவார்கள் என்ற பயத்தில் இர்பான் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இனிதான் வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கல்லூரி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மாணவர் இர்பான் வெளிநாட் டுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் விமான நிலையங்களில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வேறு மருத்துவ மாணவ- மாணவிகள் யாராவது ஆள்மாறாட்ட தில்லுமுல்லு செய்து இருக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நீட் பயிற்சி பெற்ற மாணவர்களின் பட்டியலையும் அவர்கள் தேர்வு பெற்றார்களா? என்பது பற்றிய பட்டியலையும் பயிற்சி மையங்கள் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இது தவிர நீட் தேர்வை நடத்திய மத்திய அமைப்புக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை மாணவ- மாணவிகள் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதினார்கள் என்ற பட்டியலை தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதாமல் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் போதுதான் ஆள்மாறாட்டம் நடந்து இருப்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். எனவே வெளி மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை சரி பார்த்தால் மொத்தம் எத்தனை பேர் தவறு செய்துள்ளனர் என்பதை கண்டுபிடித்து விட முடியும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆள்மாறாட்டம் தில்லுமுல்லு செய்து நீட் தேர்வில் மோசடி செய்த கும்பல் ஒரு அமைப்பாக செயல்பட்டு வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 4 மாணவ-மாணவிகளுக்கும் இந்த ஒரே கும்பல்தான் ஆள்மாறாட்டத்துக்கு உதவி செய்துள்ளது.

எனவே ஆள்மாறாட்டத்துக்கு உதவி செய்த தரகர்கள் கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். அவர்களிடம் இடைத்தரகர்கள் சிக்கினால் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.