மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் பொது நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில், மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலின்படி, தேர்வு எழுத வரும் மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.
தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.