திருச்சி:
எம்.பி.பி.எஸ், எம்.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய நுழைவு தகுதி தேர்வு (நீட்) நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மாவட்டத்தில் 18 மையங்களில் நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்வு நடைபெறும்.
இதற்காக திருச்சி கமலா நிகேதன் மாண்டிசரி பள்ளி, ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, கேர் சர்வதேச பள்ளி, தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி உள்பட மாவட்டம் முழுவதும் 18 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 11,229 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். நீட் தேர்வு எழுதும் மையங்களில் தடையின்றி மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, அயிலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 16 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 239 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி வகுப்பு நேற்று முடிவடைந்தது. ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை வெற்றி பெற வாழ்த்தி பேசினார். #NEET #NEETExam