ராமேசுவரம்:
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம் அருகே உள்ள மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் 2 படகுகளில் மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் ‘எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை கைது செய்கிறோம்‘ என்று கூறினர்.
பின்னர் 8 பேரையும் கைது செய்தனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 8 பேரும் இலங்கையில் உள்ள காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.