செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி செத்துவிட்டது: சிவசேனா காட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி செத்துவிட்டது என அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடுமையாக சாடியுள்ளார்.

மாலை மலர்

மும்பை:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி செத்துவிட்டது என காட்டமாகக் கூறினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவு வெறும் பேப்பரில் மட்டுமே இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் தேவைப்படும் ஆதரவுக்கு மட்டும் பா.ஜ.க.வுக்கு எங்கள் நினைவு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி செத்துவிட்டது. சில நிபந்தனைகளுடன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கிறது.

நாங்கள் எந்த பதவிக்கும், ஆட்சிக்கும் அலைபவர்கள் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது. நாங்கள் எங்கள் நிலையை உரிய நேரத்தில் எடுப்போம்’’ என தெரிவித்துள்ளார்.