உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மனத்தாவாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இது என் நாடு, இங்குள்ள மலைகள் என் நாட்டை சேர்ந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோதுமை வயல்கள் என் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாடு என் நாட்டை சேர்ந்தது. குஜராத் என் நாட்டை சேர்ந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த ஒரே காரியம் இந்த நாட்டை பிளவுப்படுத்தியதுதான் என்று குற்றம்சாட்டினார்.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உள்பட அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டார்கள். தங்களுக்கு அதிகாரம் அளித்த மக்களையும் மறந்து விட்டனர்.
அதிகாரம் மக்களுக்கானது அல்ல; ஆட்சியாளர்களுக்கு உரிமையான சொத்து என்பது போன்ற மனநிலையில் அவர்கள் மிதக்க தொடங்கி விட்டனர்.
பிறந்ததில் இருந்து நான் நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் சார்பில் உங்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் வேட்பாளராக நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளிடம் தனிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை தாங்கி இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவும் பாடுபடும் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். #NDAgovt #NDAbetrayed #Priyanka #Priyankainwayanad